நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்


நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்
x
தினத்தந்தி 29 April 2022 7:11 PM IST (Updated: 29 April 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

ரங்கம்மா பாட்டி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


வடிவேலு நடித்த கி.மு. என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா' என்ற காமெடி இடம் பெற்றிருக்கும். அந்த காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த காமெடி காட்சியில் வடிவேலுவை நாயிடம் கடிவாங்க வைக்கும் பாட்டியின் பெயர் ரங்கம்மா. இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் ஆகும். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார். இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அந்த காலகட்டத்தில் இருந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குண சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் குணச்சித்திர நடிப்பினை தாண்டி காமெடியில் மிகவும் பிரபலமடைந்தவர். வடிவேலுவுடன் இவர் நடித்த ஏராளமான படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தாலும் போறது தான் போற அந்த நாயை சூன்னு சொல்லிட்டு போ, காஞ்சனா படத்தில் லாரன்ஸ் உடன் நடித்த காட்சிகள் மக்கள் மனதில் இடம் பிடித்த நீங்கா காட்சிகளாகும்.

இதுபோன்ற தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த ரங்கம்மா பாட்டி, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் தவிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Next Story