கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த பிரபல நடிகர் மயங்கி விழுந்து மரணம்
கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் தீபேஷ் பான் மயங்கி விழுந்து மரணம் அடைந்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் தாஹிசர் பகுதியில் தொலைக்காட்சி நடிகர் தீபேஷ் பான் தனது கட்டிடத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்து உள்ளார். திடீரென அவர் மயங்கி சரிந்து விழுந்து உள்ளார். சற்று நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டார். கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு, தீபேஷ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
தொலைக்காட்சியில் காமெடி கா கிங் கான், காமெடி கிளப், பூட்வாலா, எப்.ஐ.ஆர்., சேம்ப் மற்றும் சன் யார் சில் மார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடரான பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடரிலும் மால்கன் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
அவரது மறைவை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் கவிதா கவுசிக் என்ற தொலைக்காட்சி நடிகை வெளியிட்டுள்ள செய்தியில், 41 வயதில் தீபேஷ் பான் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் குடி பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோ இல்லாத நபர். மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை, பெற்றோர் மற்றும் நம் அனைவரையும் விட்டு விட்டு சென்றுள்ளார் என சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார்.