சொகுசு கப்பலில் ஹனிமூன் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய பிரபல நடிகர்; வைரலான புகைப்படம்


சொகுசு கப்பலில் ஹனிமூன் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய பிரபல நடிகர்; வைரலான புகைப்படம்
x

சொகுசு கப்பலில் நடிகை ஜெனிபர் லோபசுடன் தேனிலவுக்கு சென்ற அவரது கணவர் அசந்து தூங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.



பாரீஸ்,



பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் (வயது 53). நடிகர் பென் அப்லெக் (வயது 49) என்பவரை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, நிச்சயம் செய்து, திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்து விட்டனர்.

தற்போது, இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது லோபசுக்கு 4-வது திருமணம் ஆகும். தன்னைவிட 4 வயது இளையவரான நடிகர் பென் அப்லெக்கை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர், நடன கலைஞர் மற்றும் பாடகர் என 3 பேரை நடிகை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இதேபோன்று, நடிகர் பென் அப்லெக் நடிகை ஜெனிபர் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதன்பின் நடிகர் பென், லிண்ட்சே ஷூகஸ் மற்றும் கியூபா நாட்டு நடிகை அனா டி ஆர்மாஸ் ஆகியோருடன் ஒன்றாக கிசுகிசுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் 2021ம் ஆண்டு மே மாதத்தில், நடிகை ஜெனிபர் லோபசுடன் மீண்டும் ஒன்றாக கிசுகிசுக்கப்பட்டார். முதலில் புரளி என கூறப்பட்டபோதும், பின்னர் இருவரும் அதனை ஒப்பு கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்பு, நடிகர் பென் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் செய்னி ஆற்றில் சுற்றுலா கப்பல் ஒன்றில் தேனிலவு கொண்டாட மனைவி ஜெனிபர் லோபசுடன் ஒன்றாக சென்றுள்ளார். இந்த புதுமண தம்பதியுடன் அவர்களது குழந்தைகளும் சென்றுள்ளனர்.

சென்ற இடத்தில் நடிகர் பென் கப்பலிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி, அடித்து போட்டது போன்று அசந்து தூங்குகிறார். இதுபற்றிய பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளன.

இதனை பார்த்த பலரும் பலவித விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர், அந்த மனிதரை அமைதியில் ஆழ்ந்து தூங்க விடுங்கள்... என தெரிவித்து சிரிப்புக்கான எமோஜிக்களையும் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், கல்லூரி காலத்தில் கணக்கு வகுப்பில் நான் இப்படிதான் தூங்குவேன் என தெரிவித்து உள்ளார்.

இன்னொருவர், ஹா ஹா ஹா... மிக அழகாக உள்ளார் என்றும் மற்றொருவர், நானும் கூட இதுபோன்று உறங்குவேன் என்றும் தெரிவித்து உள்ளனர்.





Next Story