மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை


மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை
x
தினத்தந்தி 9 Feb 2023 2:32 AM GMT (Updated: 9 Feb 2023 5:14 AM GMT)

கல்லூரிக்கு 'கட்' அடித்துவிட்டு சினிமாவுக்கு போனேன்... -நடிகர் சத்யராஜ்

வெரைட்டி ஹால் அனுபவம் குறித்து நடிகர் சத்யராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்...


வெரைட்டி ஹால் தியேட்டரின் உரிமையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட், என் அப்புச்சி (தாய்வழி தாத்தா) நடராஜ காலிங்கராயரின் நண்பர்தான். என் அப்புச்சி 1920-ல் லண்டன் சென்று படித்தவர்.

வெரைட்டி ஹால் எனக்குத் தெரிய டிலைட் தியேட்டர் என்ற பெயரில்தான் இயங்குகிறது. எனது 10 வயது முதல் அந்த தியேட்டருக்கு சென்று வருகிறேன். நான் அங்கு முதலில் பார்த்தது, 'பெரிய இடத்துப் பெண்' படம்தான் என்று நினைக்கிறேன்.

ஒரு பொங்கல் பண்டிகையின்போது வாத்தியாரின் (எம்.ஜி.ஆர்.) 'மாட்டுக்கார வேலன்' படம் வந்தது. அந்தப் படம் 'ஜிகிரி தோஸ்த்' என்ற இந்தி படத்தின் 'ரீமேக்' ஆகும். ஜிதேந்திரா, மும்தாஜ் ஆகியோர் நடித்திருந்த படம் அது. வெரைட்டி ஹால் தியேட்டரில் அவ்வப்போது இந்தி படங்களும் திரையிடப்படுவது உண்டு. இந்தநிலையில் 'மாட்டுக்கார வேலன்' படம் திரையிடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு 'ஜிகிரி தோஸ்த்' படத்தை வெளியிட்டனர்.

அப்போதே நாங்கள் குஷியானோம். 'டேய்... இந்தப் படத்தைப் பார்த்துத்தான் 'மாட்டுக்கார வேலன்' படத்தை எடுத்திருக்காங்க... இதைப் பார்த்தே ஆகவேண்டும்...' என்று எண்ணி நாங்கள் அனைவருமே அந்த தியேட்டருக்குப் படையெடுத்தோம். படத்துக்கு மிகப்பெரிய கூட்டம் இருந்தது. அந்த படத்தில் நடித்த ஜிதேந்திராவை மக்கள் எம்.ஜி.ஆராகவே பார்த்து ரசித்தனர். விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. கைதட்டல் தியேட்டரையே அதிரச் செய்தது. ஜிதேந்திரா வந்து அந்த காட்சியைப் பார்த்திருந்தால், 'அடப்பாவிகளா! நான் என்ன பண்ணிட்டேனு, இந்த கோவை மக்கள் இப்படி கொண்டாடுறாங்க?' என்று அசந்து போயிருப்பார். இப்படியெல்லாம் அந்த தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது.


டிலைட் தியேட்டரில் 'என்டர் தி டிராகன்' ஆங்கிலப் படம் வெளியானது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த டிலைட் தியேட்டர் அருகேயே கராத்தே பயிற்சியை சிலர் சொல்லித்தர தொடங்கினார்கள். நானும் ஒரு 6 மாதம் கராத்தே பயிற்சி எடுக்கச் சென்றேன். பயிற்சி முடிந்து வரும்போது, பல நேரங்களில் தியேட்டருக்குள் புகுந்து விடுவேன். கராத்தே வகுப்பை தவறவிட்டாலும், டிலைட் தியேட்டர் போவதை நான் எப்போதுமே தவறவிட்டது கிடையாது.

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா மிகப் பிரபலம். கல்லூரியைக் கட் அடித்துவிட்டு, அந்த தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வது மிக எளிது. அரசு கலைக் கல்லூரியில்தான் படித்தேன். சைக்கிள் இருந்தா போதும், ஒரு சந்தை கடந்தாலே, தியேட்டருக்கு வந்துவிடலாம். அதெல்லாம் ஒரு காலம்.


1914-ம் ஆண்டு 'வெரைட்டி ஹால்' திறப்பு விழாவிற்கு காரில் வந்த, சாமிக்கண்ணு வின்சென்ட், அவருடைய சகோதரர், ஜேம்ஸ் வின்சென்ட்.

கோவை நகராட்சியில் பணி புரிந்த, தம்புசாமி என்பவரின் மகன்தான், சாமிக்கண்ணு வின்சென்ட். அவரது வீடு டவுன் ஹால் கோட்டைப் பகுதியில் இருந்தது.

பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம். 1896-ம் ஆண்டு டுபான்ட் என்ற பிரஞ்சுக்காரர், நவீன சினிமா படக்கருவியுடன் பம்பாய் (இப்போது மும்பை) வந்தார். ஏசுகிறிஸ்துவின் வாழ்க்கை ('லைப் ஆப் ஜீசஸ்') என்ற சலனப் படத்தை திரையிட்டுக் காட்டினார். அதுவே இந்தியாவில் திரையிடப்பட்ட முதல் சினிமா!

சில ஆண்டுகளுக்குப் பிறகு டுபான்ட் திருச்சி வந்தார். அங்கும் அந்தப் படத்தை திரையிட்டார். மக்கள் திரண்டுவந்து வியப்புடன் அதைப் பார்த்தனர்.

அனைவரின் கண்களும் படத்தின் மேல் இருக்க, ஓர் இளைஞரின் கண்ணோ அந்தப் படக் கருவிமேல் இருந்தது!

அந்த இளைஞர்தான் சாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி பொன்மலை ரெயில் நிலையத்தில் குமாஸ்தாவாக வேலை செய்துவந்தவர். அவர் பிெரஞ்சுக்காரரிடம் இருந்து, அந்தப் படம் காட்டும் கருவியை எப்படியேனும் வாங்கிவிட முயன்றார். அதற்கான நேரம் வந்தது.

உடல்நலக் குறைவால் பிெரஞ்சுக்காரர் நாடு திரும்ப முடிவு செய்தார். படக்கருவியை விற்கவும் முன்வந்தார். உடனே சாமிக்கண்ணு பணம் திரட்டியதுடன், தன்னுடைய மனைவியின் தங்க நகைகளையும் விற்று 2,250 ரூபாய்க்கு, அந்தப் படக்கருவியை வாங்கினார்.

1905-ம் ஆண்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு அருகில் வெட்டவெளியில் நவீனக் கருவி மூலம் ஏசு கிறிஸ்து படத்தைக் காட்சிப்படுத்தினார். நல்ல வரவேற்புக் கிடைத்தது. வருமானமும் கிடைத்தது.

அதனால் மாதம் 25 ரூபாய் சம்பளம் கிடைத்த ரெயில்வே வேலையை உதறித் தள்ளினார். கூடாரக் கொட்டகைத் தொழிலி்ல் கூடுதல் கவனம் செலுத்தினார். அப்போது அவருக்கு 22 வயதுதான். அவருடைய சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் அவருக்கு உதவியாக இருந்தார்.

ஊர், ஊராக மாட்டுவண்டியில் சென்றனர். திறந்தவெளி மைதானங்களில் கூடாரக் கொட்டகை ('டென்ட் தியேட்டர்') அமைத்து நவீனக் கருவி மூலம் சலனப் படங்களை காண்பிக்கத் தொடங்கினார்கள். சார்லி சாப்ளின் சைகைப் படங்களை வெளிநாட்டில் வாங்கிவந்து திரையிட்டனர். தென் இந்தியாவில் சினிமாவுக்கு இப்படித்தான் விதைகள் தூவப்பட்டன!

நாளடைவில் சினிமா புரஜெக்டர் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் வினியோக உரிமையை சாமிக்கண்ணு வாங்கினார். அதுவே தென் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சலனப் படக் காட்சியை எடுத்துச் சென்றது.

ஊர், ஊராக நாடோடிபோல் திரிந்துவந்த அவருக்கு, நிரந்தரமாக ஒரு கொட்டகை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

1914-ம் ஆண்டு கோயம்புத்தூர் ரெயில் நிலையத்திற்குப் பின்புறம், 'வெரைட்டி ஹால்' என்ற தியேட்டரைக் கட்டினார். தென் இந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தர திரையரங்குகளில் அதுவே முதன்மை ஆனதாகக் கருதப்படுகிறது.




அதன் திறப்பு விழாவின் போது, சாமிக்கண்ணுவும், அவருடைய சகோதரர் ஜேம்ஸ்சும் வெள்ளைக்காரர்கள் போல் உடை அணிந்து காரில் வந்து இறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்களாம்.

1920-ம் ஆண்டுகளில் கோவையில் மின்சாரம் கிடையாது. ஐரோப்பிய நாட்டில் இருந்து சாமிக்கண்ணு ஒரு 'ஜெனரேட்டர்' வாங்கி வந்தார். வெரைட்டி ஹால் தியேட்டர் அருகில் அதை நிறுவி, முதன்முதலில் மின்சாரம் மூலம் தியேட்டரை இயக்கினார்.

தியேட்டர் வளாகத்தில் கம்பம் அமைத்து அதில் மின்சார விளக்கை ஒளிரவிட்டார். அப்போது அரிக்கன் விளக்குகள் காலம். மின்சாரம் என்பதே அதிசயம்! அதைப் பார்ப்பதற்கு என்றே பக்கத்து கிராமங்களில் இருந்து மாட்டுவண்டி கட்டி, மக்கள் வந்தார்களாம்.

தியேட்டரை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் மின்விளக்கு வசதி செய்துதரும்படி கோவை நகராட்சியே சாமிக்கண்ணுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்?

இப்போது கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் பவுண்டரி, சிக்சர் அடிக்கும்போது இசை முழங்க இளம்பெண்கள் குலுங்கக் குலுங்க ஆடுகிறார்கள் அல்லவா? அதை வெரைட்டி ஹால் தியேட்டரில் அந்தக் காலத்திலே அரங்கேற்றி இருக்கிறார்கள்.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு வெள்ளைச் சீருடை அணிந்த 15 கலைஞர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, அதற்கு ஏற்ப தியேட்டர் முன்பு, மின் ஒளியில் சில இளம்பெண்கள் நளினமாக நடனம் ஆடுவார்களாம். அதைப் பார்க்க ரசிகர்கள் கூடுவார்களாம்!

இவ்வாறு பல புதுமைகளைச் செய்த சாமிக்கண்ணு, 1933-ம் ஆண்டு கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) உள்ள பயோனியர் படநிறுவனத்துடன் சேர்ந்து 'வள்ளி திருமணம்' என்ற பேசும் படத்தை தயாரித்து வெளியிட்டார். ரசிகர்களிடம் அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர் தாதாசாகேப் பால்கே என்றால், தென் இந்தியாவுக்கு சினிமாவை அழைத்து வந்தவர், கோவை தாதாசாகேப் பால்கே சாமிக்கண்ணு வின்சென்ட்தான்! அந்த சாதனை மனிதரை 1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி 59-வது வயதில் இயற்கை அழைத்துக் கொண்டது.

அவரது மறைவுக்குப் பிறகு 'வெரைட்டி ஹால்' 1950-ம் ஆண்டு வாக்கில் 'டிலைட்' என்று பெயர் மாற்றம் பெற்றது. 2014-ம் ஆண்டு நூற்றாண்டு கண்ட அந்த தியேட்டர் கேரளாவைச் சேர்ந்த ஜோகர் என்பவர் வசம் தற்போது இருக்கிறது.

இருந்தாலும் அந்தத் தெரு வெரைட்டி ஹால் வீதி என்றும், அங்கு இருக்கும் காவல் நிலையம் வெரைட்டி ஹால் போலீஸ் நிலையம் என்றுமே இன்னமும் பெயர் விளங்கிக் கொண்டிருக்கின்றன.

காசு வாங்காமல் காய்கறி, பழங்களுக்கு காட்டினார்கள் சினிமா

வின்சென்ட் சகோதரர்கள், கோவையில் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும்போது, அங்குபோய் படங்களை திரையிடுவார்கள். படக் காட்சி முடிந்ததும் திரை அருகில் சில கூடைகள் வைக்கப்படும். படம் பார்த்தவர்கள் அந்தக் கூடைகளில் நெல் போன்ற தானியங்கள், காய்கறிகள், பழவகைகளை போட்டுச் செல்வார்கள். அதைப் பெற்றுக்கொண்டு டென்ட் கொட்டகையைக் கிளப்பிக் கொண்டு வேறு இடத்திற்கு போய்விடுவார்கள். யாரிடமும் எதையும் கட்டாயப்படுத்திக் கேட்கமாட்டார்கள்.

திருச்சி பகுதியில் 'அரைவல் ஆப் தி டிரைன்' என்ற ஒரு ஆங்கிலப் படத்தை திரையிட்டு இருக்கிறார்கள். அந்தப் படத்தில் ரெயில் நிலையத்திற்கு ஒரு ரெயில் வந்து நிற்கும் காட்சி இடம் பெற்று இருக்கும். திரையில் ரெயில் வரும்போது, தங்கள் மீதுதான் மோதப்போகிறது என்று பயந்து அங்கு போடப்பட்ட கொட்டகையைப் பிய்த்து எறிந்துவிட்டு மக்கள் ஓடினார்களாம். ஆரம்பத்தில் வெரைட்டி ஹால் தியேட்டரில் சினிமா மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என ஒரே காட்சி மட்டுமே திரையிடப்பட்டு வந்தது.

இரவு 9 மணிக்கு மேல் நாடகம் நடத்தப்படும். டி.கே.சண்முகம் சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம் போன்ற பிரபல நாடகக் குழுவினர் அங்கு நாடகங்கள் நடத்திவந்தனர். நாளடைவில் நாடகங்களுக்கு மவுசு குறையவே இரவில் நாடகங்கள் நிறுத்தப்பட்டன. அந்த நேரத்தில் சினிமாவை திரையிடலாமே என்று சாமிக்கண்ணு யோசித்ததன் விளைவே 'செகண்ட் ஷோ' முதல்முறையாக உருவாகி இருக்கிறது.


Next Story