பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை


பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை
x

Image Courtesy: PTI 

ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி போலீசார் முன் விசாரணைக்காக இன்று மீண்டும் நேரில் ஆஜரானார்.

புதுடெல்லி,

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்காக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார். அன்று பிங்கி இராணியும் விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி இருந்தார்.

இந்த விசாரணையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிங்கி இரானி ஆகியோரின் பதில்களில் முரண்பாடுகள் இருப்பதாக டெல்லி போலீசார் கண்டறிந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக கோரி டெல்லி போலீசார் நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்காக இன்று மீண்டும் நேரில் ஆஜரானார். இன்று அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story