'தண்ணீர் மட்டும் தான்... 10 நாளில் 10 கிலோ எடை குறைந்துவிட்டேன்' - சிறையில் இருந்து வந்த நடிகர்
சிறையில் தண்ணீர் மட்டும் தான் குடித்ததாக சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நடிகர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தி திரைத்துறையை சேர்ந்த நடிகர் கமல் ரஷித் கான். இவர் தேஷ்துரோகி என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
கமல் ரஷித் கான் திரைப்படங்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார். இவரது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
2020-ம் ஆண்டு நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இப்ரான் குறித்து கமல் ரஷித் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மும்பை மலட் பகுதி போலீசில் கமல் ரஷித் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து விமானம் மூலம் கமல் ரஷித் கடந்த 30-ம் தேதி இரவு மராட்டிய மாநில மும்பைக்கு வந்தார். அவரது வருகை குறித்து தகவலறிந்த போலீசார், மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு துபாயில் இருந்து விமானத்தில் வந்த கமல் ரஷித் கானை மும்பை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கமல் ரஷித் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக மும்பை சிறையில் இருந்த கமல் ரஷித்திற்கு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து கடந்த 11-ம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமினில் விடுதலையான பின் நடிகர் கமல் ரஷித் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறையில் இருந்த 10 நாட்களில் நான் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்தேன். ஆகையால், 10 கிலோ எடை குறைந்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.