நடிகை ஜான்வி கபூர் பிறந்த நாளில் காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்


நடிகை ஜான்வி கபூர் பிறந்த நாளில் காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்
x

ஜான்வி கபூர், கோவில் மேடையில் வேத மந்திரங்களை உச்சரித்தல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளில் பங்கேற்றார்.

திருப்பதி,

இந்தி திரையுலகின் பிரபல இளம் நடிகை ஜான்வி கபூருக்கு இன்றுடன் 27 வயது ஆகிறது. இதனை முன்னிட்டு, அவருடைய ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, ஜான்வி கபூரின் இளைய சகோதரியான குஷி கபூர், சிறு வயதில் இருவரும் ஒன்றாக இருக்கும் சில இனிமையான தருணங்கள் நிறைந்த புகைப்படங்களை வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். அதுபற்றிய தன்னுடைய பதிவில், என்னுடைய விருப்பத்திற்குரிய மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உன்னை அதிகம் நேசிக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில் ஜான்வி கபூர், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, காதலர் என கிசுகிசுக்கப்படும் ஷிகார் பஹாரியா மற்றும் நண்பர் ஆர்ரி ஆகியோருடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவிலுக்கு வந்ததும் அவருக்கு வி.ஐ.பி. அந்தஸ்து அளிக்கப்பட்டது. கோவிலில் வணங்கி, பிரகாரங்களை சுற்றி வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதன்பின், கோவில் மேடையில் வேத மந்திரங்களை உச்சரித்தல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளில் பங்கேற்றார். அவருடன், வேட்டி மேல் துண்டு அணிந்தபடி ஷிகார் பகாரியாவும் மற்றும் நண்பர் ஆர்ரியும் வந்திருந்தனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இடையேயான திருமணத்திற்கு முந்தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரையிலான 3 நாட்களில் நடந்தன. இந்த நிகழ்ச்சியிலும் ஜான்வியுடன், ஷிகார் ஒன்றாக காணப்பட்டார்.

ஜான்வி அடுத்து, தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவருக்கு இது முதல் படம் ஆகும். இதுதவிர, மிஸ்டர் மற்றும் மிஸஸ் மஹி என்ற படத்திலும், நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் ராம்சரணுடன் இணைந்து, அவர் நடித்து வருகிறார். ஜான்வியின் பிறந்த நாளில் படம் பற்றிய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஜான்வி மற்றும் ஷிகார் இருவரும் சில ஆண்டுகளாக ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். ஷிகார், மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரியான சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். ஷிகார் தொழில் முனைவோராகவும், போலோ விளையாட்டு வீரராகவும் மற்றும் ஏழைகளுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்பவராகவும் இருந்து வருகிறார்.

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.


Next Story
  • chat