படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயம்
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் நடிகை ஷர்மீன் அகீ பலத்த தீக்காயம் அடைந்தார்.
டாக்கா
வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் ஷர்மீன் அகீ. 27 வயதாகும் இவர் 'சின்சியர்லி யுவர்ஸ்', 'டாக்கா', 'பைஷே ஸ்ரபோன்' மற்றும் 'பாண்டினி' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது இவர் இருந்த மேக்கப் அறையில்ஏஎதோ பொருள் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கிய அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டப் படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்தபோது 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஷர்மீனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளார்.
அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டாக்டர்கள் தெரிவித்தள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.