'என்னை கொல்ல தொடர் முயற்சி' நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் புகார்
‘என்னை கொல்ல தொடர் முயற்சி’ நடந்தன என நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தி நடிகர் நானே படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் மீது 'மீ டூ'வில் தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்தி திரை உலக மாபியாக்கள் பல வழிகளில் தனக்கு தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு நானே படேகர் காரணம் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது தனுஸ்ரீ தத்தா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மீண்டும் புகார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தனுஸ்ரீ தத்தா அளித்துள்ள பேட்டியில், 'என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்தன. விபத்து ஏற்படுத்தும் நோக்கோடு காரின் பிரேக்குகள் பல முறை சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஒரு முறை விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். எனக்கு விஷம் கொடுக்கவும் முயற்சிகள் நடந்தன" என்று கூறியுள்ளார்.