சர்ச்சையில் பகத் பாசில் படம்
‘டாப் கியர்‘ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருவதால் பகத் பாசில் படத்துக்கு அதே பெயரை வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பகத் பாசிலுக்கு மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். வில்லன் வேடங்களையும் ஏற்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் நடித்து பேசப்பட்டார். இந்த நிலையில் புதிய தெலுங்கு படமொன்றில் கதாநாயகனாக நடிக்க பகத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்துக்கு 'டாப் கியர்' என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'டாப் கியர்' என்ற பெயரில் ஸ்ரீதர் ரெட்டி தயாரிப்பில் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்க ஏற்கனவே தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருவதால் பகத் பாசில் படத்துக்கு அதே பெயரை வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டாப் கியர் தலைப்பை முன்கூட்டியே பதிவு செய்து உள்ளோம். அதே பெயரை பகத்பாசில் படத்துக்கு வைத்து இருப்பது முறையல்ல. பகத்பாசில் படத்துக்கு வேறு பெயரை வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஸ்ரீதர் ரெட்டி கூறியுள்ளார்.