"பெண்களுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா?" - சாய் பல்லவிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆதரவு
சாய் பல்லவிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சென்னை,
நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணா நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார்.
இந்த படத்தின் விளம்பரத்திற்காக நடைபெற்ற நேர்காணலின்போது பேசிய நடிகை சாய்பல்லவி, "எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும்.
இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது. காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறியிருந்தார்கள்.
மத அடிப்படையில் இந்த சம்பவங்களை நீங்கள் அணுகினால், சமீபத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி தாக்கினார்கள். காஷ்மீர் பண்டிட் பிரச்னை, இஸ்லாமிய டிரைவர் மீதான தாக்குதல் இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம். நான் மிகவும் நடுநிலையானவள். எனவே நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஒரு சிறிய கூட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒடுக்குவது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்து மதத்திற்கு எதிரான கருத்து என இணையத்தில் ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்ப இன்னொரு பக்கம் சொந்த கருத்தை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது என ஆதரவுகளும் குவிந்தன. அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் சாய் பல்லவிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்து உள்ளார். சாய் பல்லவி தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " சாய் பல்லவிக்கு எதிராக வரும் ட்ரோலிங் மற்றும் மிரட்டல்களை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் உரிமை இல்லையா?
அவர் சொன்னது ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்க எந்த ஒரு ஒழுக்கமான மனிதனும் சொல்வது தான். இன்றைக்கு ஒருவர் 'அன்பாக இருங்கள், நல்ல மனிதனாக இருங்கள்' என்று சொன்னால் அவர் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார். வெறுப்பை உமிழ்பவர்கள் உண்மையான ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நாம் எப்படிப்பட்ட திரிக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம்? " என அவர் பதிவிட்டுள்ளார்.