கனடா தெருவிற்கு தனது பெயர் நன்றி தெரிவித்த ஏ.ஆர் ரகுமான்!


தினத்தந்தி 29 Aug 2022 10:30 AM GMT (Updated: 29 Aug 2022 11:03 AM GMT)

கனடா நாட்டில் ஒரு தெருவிற்கு உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான 'ஏ.ஆர். ரகுமான்' பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் விருது வென்ற உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான 'ஏ.ஆர். ரகுமான்' பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் பெயரைச் சூட்டியதற்கு ஏ.ஆர். ரகுமான் நன்றி தெரிவித்தார். ஏ.ஆர்.ரகுமான் சமூக ஊடகங்களில் மனப்பூர்வமான நன்றிக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

மார்காம் நகரம் மற்றும் கனடா மக்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்திற்காக நான் பெருமைப்படுகிறேன் மற்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. மார்க்கம் நகர மேயர்(பிராங்க் ஸ்கார்பிட்டி), ஆலோசகர்கள், இந்திய துணைத் தூதரக ஜெனரல்(அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடா நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.ஆர். ரகுமான் என்ற பெயர் என்னுடையதல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது மற்றும் எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும்.

ஆகவே, அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர், அனைத்து பழம்பெரும் மனிதர்கள் உட்பட அத்தனை பேரும், சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் உத்வேகத்தை அளித்தார்கள்.

நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

ஒருவேளை நான் சோர்வடைந்தாலும்... நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய இசையால் உலகை கவர்ந்திழுத்து காந்த சக்தியாக திகழும் ஏ.ஆர்.ரகுமான், 2 அகாடமி விருதுகள், ஒரு பாப்டா விருது, 2 கிராமி விருதுகள், 6 தேசிய திரைப்பட விருதுகள், ஒரு கோல்டன் குளோப் மற்றும் 15 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.


Next Story