யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக்குத்து பாடல்
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் ஏப்ரல் 14ந்தேதி திரையரங்கில் வெளியானது. ஆக்சன், காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், முதல் பாடலான அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, யூடியூப்பில் சாதனையும் படைத்தது.
அரபிக்குத்து பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இதில் இடம் பெற்ற விஜயின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இதன்படி, அரபிக்குத்து பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்திற்கான படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இதனை முடித்து விட்டு இயக்குனர் லோகேசுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிகர் விஜய் பணியாற்ற இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.