விருது வழங்கும் விழா; மனைவியிடம் தமிழில் பேசும்படி கூறிய ஏ.ஆர். ரகுமான்


விருது வழங்கும் விழா; மனைவியிடம் தமிழில் பேசும்படி கூறிய ஏ.ஆர். ரகுமான்
x

சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் மனைவியிடம் இந்திக்கு பதிலாக தமிழில் பேசும்படி ஏ.ஆர். ரகுமான் கூறியதும் பலத்த கோஷம் எழுந்தது.

சென்னை,

சென்னையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். விருது வழங்கும் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏ.ஆர். ரகுமான் பேசி கொண்டிருந்தபோது, தனது மனைவியையும் மேடைக்கு பேச வரும்படி அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சாய்ரா பானுவும் மேடைக்கு வந்துள்ளார். அப்போது ஏ.ஆர். ரகுமான், தனது பேட்டிகளை மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறினார். இதனை தொடர்ந்து அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரானார்.

அப்போது மனைவியிடம், இந்திக்கு பதிலாக தமிழில் பேசும்படி ஏ.ஆர். ரகுமான் கூறினார். இதனால், விழா நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பகுதியில் இருந்து பலத்த கோஷம் எழுந்தது.

அதற்கு அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் கடகடவென பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். உற்சாகத்துடனும் இருக்கிறேன்.

அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது குரலில் சொக்கி போய் விடுவேன். என்னால் இந்த அளவிலேயே கூற முடியும் என பேசியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் கடந்த காலங்களில் தமிழ் மீது கொண்ட பற்றை பலமுறை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த ஆண்டில் ஏ.ஆர். ரகுமான் பத்து தல மற்றும் பொன்னியின் செல்வன்: பாகம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அடுத்து, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.

அவருடைய அடுத்து வெளியாக உள்ள படங்களின் வரிசையில், மைதான், பிப்பா, ஆடுஜீவிதம், லால் சலாம் மற்றும் காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.


Next Story