புஷ்பா-2 கதையில் மாற்றம்
புஷ்பா-2 கதை மற்றும் கதாபாத்திரங்கள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய கதையை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தெலுங்கு படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். ராஷ்மிகா நாயகியாக வந்தார். சமந்தா ஊ சொல்றியா என்ற ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழுவினர் அறிவித்த நிலையில் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படத்தின் கதையை மேலும் வலுவாக மெருகூட்டும் பணி நடப்பதால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த ஆர்.ஆர்ஆர்., கே.ஜி.எப். மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய தென்னிந்திய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த புஷ்பா-2 கதை மற்றும் கதாபாத்திரங்கள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய கதையை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைக்கதையில் வேறு விஷயங்களை சேர்த்து பிரமாண்டமாக தயார் செய்து முடித்த பிறகு படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அதிக பொருட்செலவில் தயாராவதாக கூறப்படுகிறது.