நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து


நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
x

நடிகர் சார்லியின் இளைய மகன் அஜய் தங்கசாமியின் திருமண வரவேற்பில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

டைரக்டர் கே. பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் சார்லி. நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் 'காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு', அஜித்துடன் 'அமர்க்களம்', போன்ற பல படங்களில் நடித்துள்ளார். விஜய் மற்றும் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த வேடம் இன்றுவரை மக்களால் ரசிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக நகைச்சுவை மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், பெர்மிசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - பெர்மிசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.இதில், திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.


Next Story
  • chat