சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
x

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி:- தமன்னாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறதே, எப்படி? (துரை மாணிக்கம், திருப்பூர்)

பதில்:- வசியம் செய்யும் வித்தையை நன்றாகவே கற்று வைத்திருக்கிறாராம்!

கேள்வி:- நடிகர் விஜய் சேதுபதி வெற்றி படங்களை கொடுப்பதன் காரணம் என்ன? (குமரன், எஸ்.எஸ்.பி.நகர், ஈரோடு)

பதில்:- கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். கதாபாத்திரத்துக்காக எதையும் செய்யக்கூடிய நடிகர்களில் அவரும் ஒருவர்!

கேள்வி:- ஜீவா - ஜெய் இடையேயான நட்பு எப்படி இருக்கிறது? (ராஜி விஜயன், கும்பகோணம்)

பதில்:- முன்புபோல நட்பு பாராட்ட நேரம் கிடைக்கவில்லையாம். நேரம் கிடைத்தால் `சாண்ட்விச்' சாப்பிடுவார்களாம்!

கேள்வி:- சர்ச்சையான `டபுள் மீனிங்' படங்களில் நடித்து வந்த கவுதம் கார்த்திக், திருமணத்துக்கு பிறகு மாறியிருக்கிறாரா? (எம்.சரவணன், பழனி)

பதில்:- மனைவியின் கண்காணிப்பில் இருக்கிறார்!

கேள்வி:- ஒரு நடிகை சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்யவேண்டும்? (ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி, தேனி)

பதில்:- நேரம் காலம் பாரா உழைப்பு, நாவடக்கம், சகிப்புத்தன்மை இருந்தால் போதும். நிலைக்கலாம், நீடிக்கலாம்!

கேள்வி:- `அனேகன்' பட புகழ் நடிகை அமைரா பற்றி ரகசிய தகவல் சொல்லுங்களேன்... (ஸ்ரீகிருஷ்ணா, வழுவூர், மயிலாடுதுறை)

பதில்:- அமைரா, அடிக்கடி தாய்லாந்து செல்கிறார். ஆனால் எதற்கு? என்பது தான் மர்மம்!

கேள்வி:- தென்னிந்திய நடிகைகளுக்கு இந்தியில் வரவேற்பு இருக்கிறதா? (எஸ்.டி.அருணாசலம், கோவை)

பதில்:- நிச்சயம் இருக்கிறது. சிவப்பு கம்பளமே விரித்து வரவேற்கிறார்கள்!

கேள்வி:- சின்னப்ப தேவருக்கு `சாண்டோ' என்ற பட்டப்பெயர் எதனால் வழங்கப்பட்டது? (த.சத்தியநாராயணன், அயன்புரம்)

பதில்:- சின்னப்ப தேவரின் கட்டுமஸ்தான உடல்வாகுவை பார்த்து, ஒரு வெள்ளைக்காரர் 'சாண்டோ' பட்டத்தை வழங்கினாராம்!

கேள்வி:- `எனது மனைவிக்கு அடுத்து அழகான நடிகை கீர்த்தி சுரேஷ் தான்', என்று தயாரிப்பாளர் போனி கபூர் சொல்லியிருக்கிறாரே... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்:- வயதான பின்பும் ரசனை மாறவில்லை!

கேள்வி:- இந்திய சினிமாவின் `இடுப்பழகி' என்று யாரை சொல்லலாம்? (டி.சங்கர் ராஜா, மணப்பாறை)

பதில்:- இலியானா, பூமி பட்னேகர், ஷோபிதா துலிபாலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் நபரின் உடுக்கை சத்தம் அதிகமாக ஒலிக்கிறது!

கேள்வி:- ஷாருக்கானை இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசியுள்ளாரே, பிரியாமணி. என்ன காரணமாம்? (அ.வாழவந்தான், தர்மபுரி)

பதில்:- இந்தியிலும் ஒரு ஆட்டம் போடத்தான்..!

கேள்வி:- தொடர் பட தோல்வியால் சமந்தா எப்படி இருக்கிறார்? (அஞ்சலி, காரைக்கால்)

பதில்:- கொஞ்சம் சோர்ந்து தான் போயிருக்கிறார்!

கேள்வி:- ஓ.டி.டி.யில் படங்கள் திரையிடப்படுவதை பிரபலங்கள் விரும்புகிறார்களா? (மூர்த்தி கார்முகில், ஒத்தக்கடை, மதுரை)

பதில்:- ஓ.டி.டி. வளர்ச்சியை ஒரு சாரார் ஏற்கிறார்கள், ஒரு சாரார் எதிர்க்கிறார்கள். மக்கள் பார்க்கிறார்கள்!

கேள்வி:- நடிகை கனகா ஏன் பூட்டிய வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறார்? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்:- வாழ்க்கையில் சிலரால் கண்ட ஏமாற்றங்களும், விரக்தியும் தானாம்!

கேள்வி:- பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியையிடம் `என்னோட எய்ம் ஹவுஸ் வைப் ஆவது' என்று சொல்லியதாக கவர்ச்சி நடிகை ஷகிலா கூறியிருக்கிறாரே... (ஜெ.மணிகண்டன், ஆம்பூர்)

பதில்:- அவரது ஆசை நிராசையானது வருத்தம் தான்!

கேள்வி:- நடிகை சோனம் கபூர் உணவகத்தில் பணியாற்றியவராமே... (ஆர்த்தி, திருவானைக்காவல்)

பதில்:- உண்மை தான். சிங்கப்பூரில் படிக்கும்போது ஒரு சீன உணவகத்தில் பணிபுரிந்துள்ளார்!

கேள்வி:- முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கை மனதுக்குள் காதலித்தேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளாரே... (குகநாதன், கும்பகோணம்)

பதில்:- `பேட்டிங்' மட்டுமின்றி `பவுலிங்'கிலும் அவர் கில்லி அல்லவா? அதான் அம்மணி கொஞ்சம் கிறக்கம் ஆகியிருப்பார்!

கேள்வி:- இளமையான அம்மா நடிகைக்கு யார் பொருத்தமாக இருப்பார்? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)

பதில்:- சினேகா!

கேள்வி:- அட்டகத்தி தினேசை வைத்து பா.ரஞ்சித் படம் இயக்கவுள்ளாராமே... `அட்டகத்தி'யின் 2-ம் பாகமா? (மலர்விழி, ஊட்டி)

பதில்:- இல்லை. அது ஒரு கேங்க்ஸ்டர் கதை!

கேள்வி:- 17 ஆண்டுகளுக்கு பிறகு `வேட்டையாடு விளையாடு' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறதே? (கோமதி மாணிக்கம், திருப்பூர்)

பதில்:- தரமான படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதில் தவறு இல்லையே..!

கேள்வி:- குருவியாரே... உண்மையான 90 கிட்ஸ் ரசிகர்களை எப்படி கண்டுபிடிக்கலாம்? (சூரியா, விருதுநகர்)

பதில்:- சோ சிம்பிள்... இப்போதும் டி.வி.யில் `சூர்யவம்சம்' படம் ஓடினால் உற்சாகமாக பார்க்கும் ஒவ்வொருவரும் 90 கிட்ஸ் ரசிகர் தான்!

கேள்வி:- எஸ்.ஜே.சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வருவது ஏன்? (உதயகண்ணன், சேலம்)

பதில்:- அவரது மிரட்டல் நடிப்பு தான் காரணம்!

கேள்வி:- அம்மன் வேடங்களில் நடித்து அசத்தியவர்கள் யார்? (கணேசன், உத்திரமேரூர்)

பதில்:- கே.ஆர்.விஜயா, பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், மீனா, ரோஜா!


Next Story