நியூமராலஜி படி பெயரை மாற்றினாரா பிரபாஸ்..? புதிய பட போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்...!


நியூமராலஜி படி பெயரை மாற்றினாரா பிரபாஸ்..? புதிய பட போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்...!
x

நடிகர் பிரபாஸின் 24வது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.

சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸின் 24வது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'ராஜா சாப்' என பெயரிடப்பட்டு உள்ளது. பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஆங்கிலத்தில் 'PRABHAS' என்று இடம்பெறும் பிரபாஸின் பெயர் அந்த போஸ்டரில் 'PRABHASS' என்று இடம்பெற்றுள்ளது.

தொடர் தோல்விகளால் நியூமராலஜி காரணங்களுக்காக தனது பெயரை பிரபாஸ் மாற்றிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து பிரபாஸ் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.


Next Story