ரூ. 200 கோடியை கடந்த முதல் மலையாள படம் - சாதனை படைத்த 'மஞ்சுமெல் பாய்ஸ்'


ரூ. 200 கோடியை கடந்த முதல் மலையாள படம் - சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்
x
தினத்தந்தி 20 March 2024 1:43 PM GMT (Updated: 21 March 2024 5:35 AM GMT)

முன்னதாக 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் 21 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்து இருந்தது.

சென்னை,

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த மாதம் 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக 'மஞ்சுமெல் பாய்ஸ்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'.

முன்னதாக 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் 21 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்து இருந்தது. தற்போது, இத்திரைப்படம் 26 நாட்களில் ரூ. 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.

இந்த படத்தின் கதை கரு ஒரு உண்மை சம்பவம் ஆகும். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த படத்தின் கதைக்களமாகும். குணா குகை குறித்து 32 ஆண்டுகள் கழித்து மற்றொரு படம் வெளியான நிலையில் குணா குகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.


Next Story