'ஆஸ்கார் மேடையில் குனீத் மோங்காவிற்கு மூச்சுத்திணறல்..' - இசையமைப்பாளர் கீரவாணி பகிர்ந்த தகவல்


ஆஸ்கார் மேடையில் குனீத் மோங்காவிற்கு மூச்சுத்திணறல்.. - இசையமைப்பாளர் கீரவாணி பகிர்ந்த தகவல்
x

ஆஸ்கார் மேடையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குனீத் மோங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

95-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் 13-ந்தேதி நடைபெற்றது. இதில் சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் 'தி எலிஃபன்ட் விஸ்பரரஸ்' ஆஸ்கார் விருது வென்றது. ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கார் விருது மேடையில் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது என்றும், தன்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டது என்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'என்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டதால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். அதிர்ச்சியாக இருந்தது. 'இந்திய தயாரிப்பில் உருவான இந்திய படத்திற்கு கிடைக்கும் முதல் ஆஸ்கர் விருது இது' என பெருமையுடன் சொல்ல நினைத்தேன். ஆனால், என்னுடைய பேச்சு அரங்கில் கேட்கப்படவில்லை. இந்தியாவின் தருணங்கள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆன்லைனில் வீடியோ, புகைப்படம் மூலமாக பலரும் என் பேச்சு துண்டிக்கப்பட்டத்தை வருத்தத்துடன் பதிவிட்டிருந்ததை கண்டேன். பின்னர் என்னை ஆறுதல்படுத்திக் கொண்டு, மீண்டும் ஒருநாள் இதே மேடை ஏறி நிச்சயம் பேசுவேன் என சொல்லிக்கொண்டேன்' என்றார்.

இந்த நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, தனது ஆஸ்கார் அனுபவம் குறித்து பேட்டியளித்தார். அதில், "இந்த முழு பிரபஞ்சமும் என் பிரார்த்தனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அந்த அதிசயம் நடந்தது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.

இருந்தாலும் விருதாளர் குனீத் மோங்கா அளவுக்கு எனக்கு மூச்சுத்திணறல் எல்லாம் ஏற்படவில்லை. குனீத் மோங்காவிற்கு ஆஸ்கார் மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த அதிர்ச்சியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என தெரிவித்துள்ளார்.


Next Story