"அந்தகாரம்" இயக்குநருடன் கூட்டணி அமைத்த ஹரிஸ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
கடந்த ஆண்டு, தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எல் ஜி எம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பார்க்கிங். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இது தவிர, டீசல், நூறு கோடி வானவில், உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
அதேசமயம் ஹரிஷ் கல்யாண், லப்பர் பந்து எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமிழரசன் பச்சை முத்து இயக்குகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா விஜய், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ஹரிஸ் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, அந்தகாரம் படத்தை இயக்கி புகழ்பெற்ற விக்னராஜன் இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண் நடிக்க இருக்கிறார். தி ரூட் மற்றும் பேஷன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைக்கிறார். ஹரிஸின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளன.