"இந்த நேரத்தில் நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும்..." - விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல்


இந்த நேரத்தில் நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும்... - விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல்
x

ஒரு மனிதராக நல்ல பெயரை வாங்குவது சாதாரண விஷயம் இல்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னை மன்னித்துவிடுங்கள் விஜயகாந்த் அண்ணா... இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த எங்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. உங்களிடம் இருந்து நான் அதை கற்றுக்கொண்டேன்.

உங்கள் அலுவலகத்திற்கு பசியோடு வருபவர்களுக்கு நீங்கள் சாப்பாடு போட்டு அனுப்புவீர்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். உங்களைப் போலவே பிறருக்கு நல்லது செய்ய நானும் முயற்சித்து வருகிறேன். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். ஒரு அரசியல்வாதியை இழந்துவிட்டோம் என்பதை விட, ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நீங்கள் நல்ல பெயரை வாங்கி இருக்கிறீர்கள். ஆனால் ஒரு மனிதராக நல்ல பெயரை வாங்குவது சாதாரண விஷயம் இல்லை. உங்கள் பெயர் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும்."

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.


Next Story