150 வயதானாலும் 'சூர்யவம்சம் 2' படத்தில் நடிப்பேன் - சரத்குமார்


150 வயதானாலும்  சூர்யவம்சம் 2 படத்தில் நடிப்பேன்  - சரத்குமார்
x

'சூர்யவம்சம் 2’ படத்தில் 150 வயதானாலும் நடிப்பேன் என்று நடிகர் சரத்குமார் ’ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

'சூர்யவம்சம்', 'வானத்தைப் போல' எனப் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஹிட் லிஸ்ட்'. இதனை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், "இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இருவரும் என் வாழ்வில் முக்கியமான நபர்கள். அவர்கள் எனக்கு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். எவ்வளவோ பிரச்சினைகள் எனக்கும் ரவிக்குமாருக்கு வந்தாலும் அவர் ஒரு தங்கமான மனிதர். இது ஒரு குடும்ப விழா. விஜய் கனிஷ்கா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். 'சூர்யவம்சம் 2' எடுக்கலாம் என்று நானும் விக்ரமன் சாரும் சேர்ந்து நிறைய பேசினோம். ஆனால், அது சரியாக அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

சீக்கிரம் அது நடக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். 'சூர்யவம்சம் 2' அல்ல 3... 4... 5... என எத்தனை பார்ட் வேண்டுமானாலும் எடுக்கட்டும். எனக்கு 150 வயதானாலும் அந்தப் படத்தில் நான் நடிப்பேன். உடனே, '150 வயது வரை வாழ்வேனா?' என்று கேட்காதீர்கள். 150 வயசு வரைக்கும் வாழ்வேன்னு சொன்னா சந்தோஷப்படுறதைவிட கிண்டல் பண்றவங்கதான் அதிகமாக இருப்பாங்க. எப்படி 150 வயசு வரைக்கும் வாழ்வார்னு எழுதுவாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் பாபாவே நான்காயிரம் ஆண்டு வாழ்ந்து இருக்கிறார். புரட்சித் தலைவர், மக்கள் தலைவி இல்லை என்றாலும், இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதுதான் வாழ்க்கை. மது பழக்கத்தையும் போதை பழக்கத்தையும் தேவையில்லாதது என நினைப்பவன் நான்" என்றும் பேசியுள்ளார்.


Next Story