வெளியான ஒரே மாதத்தில்... கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு


வெளியான ஒரே மாதத்தில்... கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2024 9:23 AM GMT (Updated: 21 March 2024 2:53 PM GMT)

இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த மாதம் 12-ந் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் வாரத்தில் ரூ.61 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இந்த படத்தின் கதை நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதிய 'பட்டத்துயானை' நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நடிகர் வேல ராமமூர்த்தியும் இதுகுறித்து காட்டமாக பேட்டியில் பேசினார். ஆனால் படக்குழு தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற 9ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Next Story