நாதஸ்வர ஓசையிலே...


நாதஸ்வர ஓசையிலே...
x
தினத்தந்தி 4 Dec 2022 1:44 PM IST (Updated: 4 Dec 2022 1:45 PM IST)
t-max-icont-min-icon

நீர் வளமும், நில வளமும் மிக்க தஞ்சை மண், தமிழகத்தின் அட்சய பாத்திரம்... வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரித்தாயின் கருணையால் வளம் கொழிக்கும் புண்ணிய பூமி...

கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்றெல்லாம் போற்றப்படும் சோழ மன்னர்கள் தன்னுயிர் போல் மன்னுயிர் காத்த வளநாடு...

ஓயாமல் உழைத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உணவளித்து மகிழும் வேளாண் மக்கள் வாழும் தரணி...

கலைகளின் பிறப்பிடம்; கலைஞர்களின் இருப்பிடம்...

ஆம்... பெருமைமிக்க இசைக்கலை, நாட்டியக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்றவற்றின் பிறப்பிடமாக விளங்குகிறது இந்த தஞ்சை மண்.

குறிப்பாக தெய்வீக இசையாக விளங்கும் நாதஸ்வர இசை தோன்றி வளர்ந்தது இந்த சோழநாட்டில்தான். நாதஸ்வரம் ஒரு தமிழ் இசைக்கருவி. காற்றுக்கருவியான இந்த குழல் கருவி தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது.

நாதஸ்வரமும் அதன் இணை இசைக்கருவியான தவிலும் இல்லாமல் தமிழ் மண்ணில் மங்கல நிகழ்ச்சிகள் கிடையாது. பழங்காலம் முதலே திருமணத்தின் போது நாதஸ்வரம் இசைக்கும் வழக்கம் உள்ளது. கோவில் திருவிழாக்களில் நாதஸ்வரம்-மேளம்தான் கதாநாயகன். நாதஸ்வர, மேள இசை, பக்தர்களின் மனதில் பெரும் உற்சாகத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தும்.

இதே வழக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பிற தென் மாநிலங்களிலும் உள்ளது. பண்டைய தமிழ் இலக்கியங்களில் நாதஸ்வரம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இது 'வங்கியம்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாதஸ்வரத்தை போன்று வட மாநிலங்களில் 'ஷெனாய்' இசைக்கருவி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.




திருமருகல் நடேச பிள்ளை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, வேதாரண்யம் வேதமூர்த்தி, காருகுறிச்சி அருணாசலம், திருவிழா ஜெய்சங்கர், ஷேக் சின்ன மவுலானா, நாமகிரிப்பேட்டை, கிருஷ்ணன், மதுரை எம்.பி.என்.சேதுராமன்-எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்கள், சேஷம்பட்டி டி.சிவலிங்கம் போன்ற பல நாதஸ்வர வித்வான்கள் நாதஸ்வர இசைக்கு பெருமையும், புகழும் சேர்த்து உள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாதஸ்வரம் வாசித்த பெருமை காருகுறிச்சி அருணாசலத்திற்கு உண்டு. இதற்காக அங்கு சென்ற அவரை அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், கார் கதவை திறந்து விட்டு வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

கலைகளை போற்றி வளர்க்கும் காவிரி டெல்டா பகுதியில்தான் நாதஸ்வரம், தவில், வீணை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.

மக்களின் கலாசார, பண்பாட்டோடு இணைந்த நாதஸ்வரம் குழல் கருவிகளிலேயே அதிக ஓசை எழுப்பக்கூடியது. தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நாதஸ்வரம் தயாரிக்கப்படுகிறது.

நன்கு காய்ந்த, வைரம் பாய்ந்த ஆச்சா மரத்தை கொண்டு நாதஸ்வரத்தை தயாரிக்கிறார்கள். குழல், திமிரு, அனசு என்ற 3 பகுதிகளை கொண்டது நாதஸ்வரம். இதில் குழலின் மேல் விரல்களை வைத்து வாசிப்பதற்கு வசதியாக 7 துளைகள் போடப்பட்டு இருக்கும். கீழ் பகுதியில் 5 துளைகள் போடப்பட்டு, திறப்பதற்கு ஏற்ற வகையில் மெழுகால் மூடப்பட்டு இருக்கும். பம்பரம் போன்ற திமிரு பகுதியில் வாசிப்பதற்கான சீவாளி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த சீவாளி திருவாவடுதுறை, மயிலாடுதுறை பகுதிகளில் காவிரி கரையோரம் விளையும் ஒரு வகையான கோரை புல்லின் தண்டை நன்கு பதப்படுத்தி செய்யப்படுகிறது. ஒலிபெருக்கி போன்ற தோற்றம் கொண்ட அனசு பகுதியை வாகை அல்லது 'ரோஸ் உட்' மரத்தை கொண்டு தயாரிக்கிறார்கள்.

வழக்கமான நாதஸ்வரம் 1.25 கிலோ எடையுடன் 34 அங்குல நீளம் இருக்கும்.

மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூரில் நாதஸ்வர தயாரிப்பு பட்டறை நடத்தி வரும் சரவணன் இதுபற்றி கூறியதாவது:-

எங்கள் தாத்தா கிருஷ்ணசாமி, தந்தை டி.கே.ராமாச்சாரி காலத்தில் இருந்து 50 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் நாதஸ்வரம் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது. நாதஸ்வரத்துக்கான ஆச்சா மரத்தை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, பண்ருட்டி மற்றும் புதுச்சேரி மஞ்சக்குப்பம் பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம்.

நாங்கள் கைகளாலேயே மரத்தை செதுக்கி நாதஸ்வரம் செய்கிறோம். சிலர் மெஷினை பயன்படுத்தியும் செய்கிறார்கள். இப்போது 24 அங்குலம், 18 அங்குலம் என்று நீளம் குறைவான நாதஸ்வரங்களும் செய்யப்படுகின்றன. 600 கிராம், 400 கிராம் எடைகளிலும் செய்கிறோம். ஒரு நாதஸ்வரம் செய்ய 3 நாட்கள் ஆகும். ஒரு மாதத்தில் சுமார் 10 நாதஸ்வரங்கள் தயாரிக்கிறோம். ஒரு நாதஸ்வரம் அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் வரை விலை போகிறது. சில சமயங்களில் சற்று குறைவான விலையிலும் விற்கிறோம்.

இந்த தொழிலுக்கு முன்பு போலவே இப்போதும் வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களில் இருந்தும் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்தும் வந்து வாங்கிச்செல்கிறார்கள். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் நாங்கள் தயாரித்த நாதஸ்வரம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தவிலுக்கு 'தஞ்சாவூர் தவில்' என்ற அடைமொழியே உண்டு. தோல் கருவியான தவில் பலா மரத்தில் செய்யப்படுகிறது. தவில் உருளையில் சிறிய வட்டமாக இருக்கும் பகுதி இடந்தலை ஆகும். இது எருமை கன்றின் தோலால் செய்யப்படுகிறது. பெரிய வட்டமான வலந்தலை ஆட்டின் தோலால் செய்யப்படுகிறது.

வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், வலங்கைமான் ஏ.சண்முக சுந்தரம் பிள்ளை, தஞ்சை டி.ஆர்.கோவிந்தராஜ், நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற பல புகழ்மிக்க தவில் வித்வான்களை பெற்ற பெருமை கொண்டது தமிழ்நாடு.

தவில் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள திருவாவடுதுறையைச் சேர்ந்த பூபதி என்பவர் இதுபற்றி கூறுகையில், ''தவில் செய்வதற்கான பலா மர துண்டுகளை ஜெயங்கொண்டம், மருதூர், சின்ன வளையம், பெரிய வளையம், பொன்பரப்பி பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம். அதன்பிறகு அவற்றை எங்கள் பட்டறையில் வைத்து தேவையான அளவுக்கு சதுரமாக வெட்டி சுமார் ஒரு வருடம் காய வைக்கிறோம். பின்னர் அவற்றை குடைந்து, தவிலுக்கான கூடு செய்கிறோம். இப்படி ஒரு கூடு செய்ய ஒரு நாள் ஆகும். இதை ரூ.15 ஆயிரம் விலைக்கு விற்கிறோம். அதை சிதம்பரம், திருவையாறு, திருச்சி ஆகிய ஊர்களுக்கு வாங்கிச்சென்று தோல் கட்டுகிறார்கள். அதற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். மொத்தத்தில் ஒரு தவில் செய்து முடிக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்'' என்றார்.

தங்கள் குடும்பம் 3 தலைமுறையாக தவில் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழ் சினிமாவில்...



தமிழ் திரைப்படங்களில் நாதஸ்வர இசைக்கு காலம் காலமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

'நாதஸ்வர சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, 1940-ம் ஆண்டு டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளியான 'காளமேகம்' படத்தில் நாதஸ்வர வித்வானாக நடித்து இருந்தார். அதற்கு முன்னதாக 1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் நாதஸ்வர வித்வானாக சில காட்சிகளில் வருவார்.

1962-ம் ஆண்டு வெளியான 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா' என்ற காலத்தால் அழியாத பாடலில் எஸ்.ஜானகியின் குரலுடன் இணைந்து காருகுறிச்சி அருணாசலம் அற்புதமாக நாதஸ்வரம் வாசித்து இருப்பார். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் அருமையான முகபாவங்களுடன் கூடிய நடிப்பால் அந்த பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார்கள்.

இதேபோல் நாதஸ்வர வித்வான் மற்றும் பரதநாட்டிய பெண்மணியின் வாழ்க்கையை மையமாக கொண்டதுதான் 1968-ல் சிவாஜிகணேசன்-பத்மினி, ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் வெளியான 'தில்லானா மோகனாம்பாள்' படம். இந்த படத்தில் மதுரை சேதுராமன், பொன்னுசாமியின் நாதஸ்வர இசை ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும். குறிப்பாக 'நலந்தானா' பாடலில் பி.சுசீலாவின் தேன்குரலுடன் கலந்து வரும் நாதஸ்வர இசை, காற்றுள்ள வரை இம்மண்ணில் உலாவரும்.

இந்த படத்தில் தவில் இசைக்கலைஞராக டி.எஸ்.பாலையா அமர்க்களப்படுத்தி இருப்பார்.

டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இந்த படத்தை காருகுறிச்சி அருணாசலத்துக்கு சமர்ப்பணம் செய்து இருந்தார்.

இதேபோல் 1967-ல் வெளியான ஸ்ரீதரின் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் 'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி' என்ற பாடலில் டி.எம்.சவுந்தரராஜன் குரலுடன் இணைந்து நாதஸ்வரம் மேற்கொள்ளும் பயணம் விவரிக்க முடியாத ஒரு சுகானுபவம்.

1968-ல் வெளியான 'பூவும் பொட்டும்' படத்தில் 'நாதஸ்வர ஒசையிலே' என்ற பாடலில் நாதஸ்வரத்தின் இசை காதில் ரீங்காரமிடும்.

இசைஞானி இளையராஜா, நாதஸ்வரம் தனக்கு மிகவும் பிடித்த இசைக்கருவி என்று சொல்வது உண்டு. 'தில்லானா மோகனாம்பாள்' சாயலில் 1989-ல் உருவான 'கரகாட்டக்காரன்' படத்தில், அவர் நாதஸ்வரம்-தவிலை பயன்படுத்தி ஓர் இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார்.

1994-ல் வெளிவந்த 'புதுப்பட்டி பொன்னுத்தாயி' படத்தில் கணவன்-மனைவியான நடிகர் நெப்போலியனும், நடிகை ராதிகாவும் நாதஸ்வர கலைஞர்களாக நடித்து இருப்பார்கள். விஜயகுமார் தவில் வித்வானாக வாழ்ந்து இருப்பார். ராதிகா சிறந்த முகபாவனை, உடல் மொழியுடன் நாதஸ்வரம் வாசித்து இருந்தார்.


கல் நாதஸ்வரம்



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம்.

மரத்தில் செய்யப்படும் இசைக்கருவிதான் நாதஸ்வரம். ஆனால் கோவில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் உள்ளது. 2 அடி நீளமும், 3 கிலோ எடையும் கொண்ட இந்த நாதஸ்வரம் சாதாரண நாதஸ்வரத்தைவிட அதிக எடை கொண்டது.

மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரத்தில் 7 சுவரங்களை வாசிக்க முடியும். ஆனால் இந்த கல் நாதஸ்வரத்தில் 6 சுவரங்களைத்தான் வாசிக்க முடியும். இதற்கு அதிக மூச்சுப்பயிற்சி தேவை. சண்முகப்பிரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்களை மட்டுமே இதில் வாசிக்க முடியும். சங்கராபரணம், கரஹரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திய ராகங்களை இதில் வாசிக்க இயலாது.

எப்போதாவது முக்கிய திருவிழாவின் போதுதான் இந்த கல் நாதஸ்வரம் வாசிக்கப்படும். கடைசியாக 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுத பூைஜயை முன்னிட்டு நாதஸ்வர வித்துவான் என்.சாமிநாதன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் கோவிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் இருக்கிறது. 350 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த நாதஸ்வரம் காட்சிக்காக மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது. வாசிக்கப்படுவது இல்லை.

வெளிநாட்டு கலைஞர்கள்

நமது பாரம்பரிய இசைக்கருவிகள் மீது வெளிநாட்டினருக்கு மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும் உண்டு. நாதஸ்வர இசையையும், வீணை இசையையும் அவர்கள் விரும்பி கேட்பார்கள்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாக்சபோன் இசைக்கலைஞரான ரோலண்ட் சாப்பர் என்பவர் 1981-ம் ஆண்டு தமிழகம் வந்து 4 ஆண்டுகள் தங்கி இருந்து வித்துவான் கருப்பையா பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார்.

இதேபோல் வின்னி கோலியா, ஜே.டி.பார்ரன், வில்லியம் பார்க்கர் போன்ற வெளிநாட்டினரும் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டனர்.

1 More update

Next Story