'இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது' - ஏ.ஆர்.ரகுமான்
இந்தியா ஒரு உண்மையான சாம்பியனை இழந்துவிட்டது என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சில ஆளுமைகள் வாழும் பாடபுத்தகமாக இருப்பார்கள். தலைமைத்துவம், வெற்றி மற்றும் வாழ்க்கை மரபுகள் குறித்து நமக்கு கற்றுக் கொடுப்பார்கள். அவர்கள் அசாதாரணமான மனிதர்களாகவும், அதே சமயம் எளிதில் அணுகக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். நம்மை ஊக்குவித்து வழிநடத்துவார்கள். இந்தியா ஒரு உண்மையான மகனையும், சாம்பியனையும் இழந்துவிட்டது. ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.