நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்தானா? ஆண்ட்ரியா பதில்


நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்தானா?  ஆண்ட்ரியா பதில்
x
தினத்தந்தி 4 April 2024 4:41 AM GMT (Updated: 4 April 2024 5:35 AM GMT)

ஒரு பொண்ணு அழகா இருந்தா, அதை கொண்டாடணும்ங்க... இதுல என்ன தப்பு இருந்துட போகுது என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

சென்னை,

பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நட்சத்திர பேட்டிக்காக `தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

`பச்சைக்கிளி முத்துச்சரம்' படம். தான் எனக்கு முதல் படம். அந்த சமயம் அமெரிக்காவுக்கு மியூசிக் கோர்ஸ் படிக்க ரெடியா இருந்தேன். நான் மிடில் கிளாஸ் பேமிலி. இந்த படம் நடிச்சுட்டு போனா கொஞ்சம் காசு கிடைக்கும். படிக்க யூஸ் ஆகும்னு நினைச்சு 20 நாட்கள் நடிச்சேன். ஆனால் இப்போ வேற மாதிரி ஆயிடுச்சு. ஆனா யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க... நான் இதுவரைக்கும் அந்தப் படத்தை பார்க்கல (ரகசியமாக சொல்கிறார்)

நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் தானா?

நிச்சயமா அவசியம் தான். கவர்ச்சி காட்டாத நடிகைகளை தப்பு சொல்லமுடியாது. ஆனா அவங்களுக்கு வாய்ப்பு கொஞ்சமா தான் இருக்கும். ஏன்னா சில கதைக்கு கவர்ச்சி கூட தேவையா இருக்கும். அந்த சமயம் கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் கண்ணுக்கு தெரியாமல் போயிடும். ஒரு பொண்ணு அழகா இருந்தா, அதை கொண்டாடணும்ங்க... இதுல என்ன தப்பு இருந்துட போகுது.

நீங்கள் பாடியதிலேயே உங்களுக்குப் பிடித்த பாடல் எது?

`கோவா' படத்தில் வரும் `இதுவரை இல்லாத உணர்விது...' பாடல் தான்.

நடித்ததில் பிடித்த நடிகர் யார்?

கமல்ஹாசனும், கார்த்தியும் தான். `விஸ்வரூபம்', `ஆயிரத்தில் ஒருவன்' என்னால் மறக்கவே முடியாத மூவிஸ்.

திருமணம் எப்போது? என்ன ஐடியா வைத்திருக்கிறீர்கள்?

ஐடியா எதுக்குங்க... கல்யாணத்துக்கு ஒரு நல்ல ஆம்பள தான் வேணும். நேர்மையான நல்ல ஆளு கிடைக்கட்டும். பார்க்கலாம். அப்படி ஏதும் ஆளு இருக்கா...இப்படி ஜாலியாக முடித்தார், ஆண்ட்ரியா.


Next Story