வருகிறதா கோலமாவு கோகிலா-2...? மீண்டும் நயன்தாராவுடன் இணையும் நெல்சன்..!


வருகிறதா கோலமாவு கோகிலா-2...? மீண்டும் நயன்தாராவுடன் இணையும் நெல்சன்..!
x
தினத்தந்தி 31 Oct 2023 4:36 AM GMT (Updated: 31 Oct 2023 4:46 AM GMT)

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மீண்டும் நயன்தாராவுடன் இணைய உள்ளார்.

சென்னை,

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமாருக்கு 'கோலமாவு கோகிலா' படம் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவரின் டார்க் காமெடிகள் பெரிதும் பேசப்பட்டன. உலகளவில் ரூ.100 கோடி வசூலித்து 'டாக்டர்' படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக இந்த படம் சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா, நெல்சன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஜவான்' பட வெற்றியை தொடர்ந்து 'அன்னபூரணி', 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960', 'கமல் 234' என பல படங்களில் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படம் 'கோலமாவு கோகிலா' படத்தின் 2ம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நயன்தாராவும் நெல்சன் உடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க தயாராக இருப்பதாகவும், இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story