ஜவான் - சினிமா விமர்சனம்


ஜவான் - சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிகை: நயன்தாரா, தீபிகா படுகோனே  டைரக்ஷன்: அட்லி இசை: அனிருத் ஒளிப்பதிவு : ஜி.கே.விஷ்ணு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வந்துள்ள படம்.

இந்திய எல்லை பகுதியில் ரத்த வெள்ளத்தில் ஆற்றில் அடித்து வரப்படும் ஷாருக்கானை அப்பகுதி மக்கள் காப்பாற்றுகிறார்கள்.

அப்போது அந்த ஊர் மக்களை தாக்க ஒரு கும்பல் வரும்போது ருத்ர தாண்டவமாடி அவர்களை காப்பாற்றுவதோடு அந்த ஊரிலேயே தங்குகிறார்.

30 வருடங்களுக்குப் பிறகு ஒரு மெட்ரோ ரெயிலை ஐந்து பெண்களின் உதவியால் கடத்தும் மொட்டை தலை ஆசாமியாக இன்னொரு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் வருகிறார். ரெயிலில் இருக்கும் தனது பெண்ணை காப்பாற்ற ஷாருக்கான் கேட்கும் ரூ.40 ஆயிரம் கோடியை ஆயுத வியாபாரியான விஜய் சேதுபதி கொடுக்கிறார். அந்த பணத்தை கொண்டு ஏழை விவசாயிகளின் கடனை அடைத்து தப்பிக்கிறார்.

ஷாருக்கான் ஏன் இந்த பணக் கொள்ளையில் ஈடுபட்டார்? இரண்டு ஷாருக்கான்களுக்கும் இடையே என்ன தொடர்பு? ஷாருக்கானை போலீசார் கைது செய்தார்களா? என்பது மீதி கதை.

விக்ரம் ரதோர், ஆசாத் என இரட்டை கதாபாத்திரங்களில் ஷாருக்கான் அமர்களப்படுத்தி இருக்கிறார். கோணி துணியை முகத்தில் கட்டி 'மாஸ்' காட்டும் காட்சிகளில் விசில் பறக்கிறது. மெட்ரோ ரெயிலை அசாத்தியமாக கடத்துவது, போலீஸ் படைக்கு நடுவே தப்பிப்பது, என படம் முழுவதும் மிரட்டி உள்ளார். ஜெயிலராக அவர் வரும் காட்சிகள் மிடுக்கு. ராணுவ அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார்.

நயன்தாரா, போலீஸ் அதிகாரியாக கவனம் ஈர்க்கிறார். சண்டை காட்சிகளில் 'அடடா' சொல்ல வைக்கிறார்.

சில காட்சிகளே வந்தாலும் தீபிகா படுகோனே சுலபமாக ஸ்கோர் செய்கிறார். சிறைச்சாலையில் அவரது உணர்வுப்பூர்வமான காட்சிகள் நெகிழ வைக்கிறது.

விஜய் சேதுபதி வழக்கமான வில்லன் ஸ்டைலை காட்டி ரசிக்க வைக்கிறார். அவரது உடல்மொழியும், வசனமும் கேரக்டருக்கு பலம்.

பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, ரித்தி தோஹ்ரா, சஞ்சீதா, கிரிஜா ஓக், யோகிபாபு உள்ளிட்டோரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவு சேர்க்கிறார்கள்.

சஞ்சய் தத் திடீர் 'என்ட்ரி' கொடுத்து கைதட்ட வைக்கிறார்.

ஜி.கே.விஷ்ணுவின் கேமரா படம் முழுவதும் வித்தை காட்டியிருக்கிறது. அனிருத்தின் இசை படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 'ராமய்யா... வஸ்தாவையா...' பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

சிறைச்சாலையில் ஆட்டம் போடுவது, கைதிகளையே கொள்ளை திட்டத்திற்கு பயன்படுத்துவது என லாஜிக் மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை. பிரமாண்டம் என பக்கா கமர்ஷியல் படம் கொடுத்துள்ளார் அட்லி.


Next Story