ராஜமவுலி இயக்கும் படத்தில் கமல்?
ராஜமவுலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற டைரக்டராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்- நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். 'பாகுபலி'யில் நடித்த பிறகே பிரபாஸ் மார்க்கெட் உயர்ந்தது. 'ஆர்.ஆர்.ஆர்.' படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்துள்ளது. ராஜமவுலியின் படங்களை வெளிநாட்டு மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடுகிறார்கள். தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனும், ராஜமவுலியும் சந்தித்தனர். அப்போது இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை. தற்போது கமல்ஹாசன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம், பா.ரஞ்சித் இயக்கும் படங்களிலும் நடிக்க இருக்கிறார். மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படமும் கைவசம் உள்ளது.