கேரள நிலச்சரிவு - நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிதியுதவி
மீட்பு பணிக்காக நடிகர் விக்ரம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சென்னை,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது.
கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நிலச்சரிவு மீட்பு பணிக்காக நடிகர் விக்ரம் நிவாரணம் வழங்கியுள்ளார். இதற்காக கேரள முதல்- மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் தொகையை விக்ரம் வழங்கியுள்ளார்.