நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்: சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.
ஐதராபாத்,
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகேஷ் பாபுவின் தாயார் காலமானதை தொடர்ந்து நடிகர், நடிகைகள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
"அன்புள்ள அம்மா, நீங்கள் என் முதல் குரு, என் அடித்தளம் மற்றும் என் இதயம். உங்கள் அன்பு எனக்கு பாதுகாப்பு. என் வாழ்க்கையில் நீங்கள் மிகப்பெரிய செல்வாக்கு. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உங்கள் அடுத்த பயணத்திற்கு அன்பும் பிரார்த்தனைகளும்" என்று மகள் மஞ்சுளா கூறியுள்ளார்.
இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.