கேரள நடிகை கனகலதா காலமானார்


கேரள நடிகை கனகலதா காலமானார்
x
தினத்தந்தி 7 May 2024 9:34 AM GMT (Updated: 7 May 2024 2:55 PM GMT)

பார்கின்சன் மற்றும் அல்சைமர் என்ற நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகை கனகலதா காலமானார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை கனகலதா. 1960-ம் ஆண்டு பிறந்த இவர், தனது சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலமாக திரைப்படத்துறைக்கு வந்த அவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 280-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், தமிழில் 12 படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் தான் கடந்த 2021-ம் ஆண்டில் அவர் நரம்பியல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரால் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

படுத்தபடுக்கையாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை, அவரது சகோதரி விஜயம்மா உடனிருந்து கவனித்தது வந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு திரைப்பட அகாடமி மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் உதவி செய்து வந்தது.

இந்நிலையில் நடிகை கனகலதா நோய் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Next Story