கரு முட்டை சர்ச்சை: 'தவறான தகவலை பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்' - நடிகை மெஹரின்

image courtecy: instagaram@mehreenpirzadaa
கரு முட்டை குறித்த பேச்சு சர்ச்சையானதையடுத்து, அதை திரித்து சிலர் தவறான தகவலை பரப்பியுள்ளதாகவும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகை மெஹரின் கூறியுள்ளார்.
மும்பை,
தமிழில் தனுஷ் ஜோடியாக 'பட்டாஸ்' மற்றும் 'நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா' படங்களிலும், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ள மெஹரின் சமீபத்தில் கரு முட்டையை பத்திரப்படுத்தும் முறைப்பற்றி வலைதளத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். தனது கருமுட்டையை பாதுகாத்து வைத்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதை திரித்து சிலர் தவறாக தகவல் பரப்பி அவதூறு செய்து இருப்பதாக மெஹரின் கண்டித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "கருமுட்டை குறித்து நான் வீடியோவில் வெளியிட்ட தகவலை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் இணைய தளத்தில் தவறாக அவதூறு செய்துள்ளனர்.
இது மன்னிக்க முடியாத குற்றம். கருமுட்டையை உறைய வைக்கும் முறை பற்றி நான் தைரியமாக பேசினேன். குழந்தைக்காக பெண்கள் அவசரமாக கருத்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை இப்போது வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கருமுட்டைகளை பத்திரப்படுத்தி வைக்கும் முறை ஒரு வரப்பிரசாதம் என்றேன்.
இதை சரியாக புரிந்து கொள்ளாமல் என்மீது அவதூறு செய்துள்ளனர். நான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். தவறான தகவலை பரப்பியவர்கள் அதை நீக்கிவிட்டு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.






