தனுஷுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்
தனுஷ் மற்றும் நித்யா மேனன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
கேரளாவை சேர்ந்த நித்யாமேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான 'ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு தனுஷுடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு மீண்டும் தனஷுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்தை அவரே இயக்க உள்ளார். அதுவும் சிறந்த படமாக இருக்கும் என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.