காதலியை நினைவுபடுத்திய பார்த்திபனின் கேள்வி.. பதில் மூலம் முன்னாள் காதலிக்கு தூது விட்ட சேரன்


காதலியை நினைவுபடுத்திய பார்த்திபனின் கேள்வி.. பதில் மூலம் முன்னாள் காதலிக்கு தூது விட்ட சேரன்
x

உங்கள் காதலிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று இயக்குநர் பார்த்திபனின் பதிவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.

சேரன் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இயக்குனராக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பின்னர் நான்கு தமிழ்நாடு பிலிம்ஸ் விருதுகளும், ஐந்து தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய பாண்டவர் பூமி, வெற்றி கோடி கட்டு திரைப்படங்களானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படங்களின் வெற்றி மூலம் பிரபலமான இவர், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக கண்டறியப்பட்டார்.

இயக்குனராக இவர் அடைந்த பிரபலத்தை தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையும் வெளிப்படுத்தினார். பின்னர் இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இந்த படத்தில் மனிதன் தனது ஒவ்வொரு பருவத்திலும் சந்திக்கும் காதலை அற்புதமாக திரையிட்டு காட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் காதலை மிக காவியத்தன்மையுடன் சித்திரிக்க முயன்றவர். அவர் இயக்கிய பொக்கிஷம் படம் இரண்டு காதலர்களுக்கு இடையிலான கடிதம் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது.

குறிப்பாக இந்த மாதிரியான கதைகளை காதலிக்காமல் ஒரு இயக்குநரால் எழுதிவிட முடியாது. நிச்சயமாக சேரனின் வாழ்க்கை அழகான காதல் கதைகளால் நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும். தற்போது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவரது இளமை காதல் எப்படியானதாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி ஒரு சிறு அறிகுறி கிடைத்துள்ளது.

சமீபத்தில் இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் "இழந்த காதலி, காதலனை திருமணத்துக்கு பிறகு நீங்கள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் பேச நினைப்பது..? நினைப்பதை அனுப்புங்கள்.. மீண்டும் நாளை பேசுகிறேன்..!" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.

பார்த்திபனின் பதிவுக்கு பதிலாக சேரன் " உன்னோட வாழ்க்கை நல்லா இருக்குன்னு நம்புறேன். அதுக்கான பிரேயர் என்கிட்ட இருந்து எப்பவும் இருக்கும். உன்னோட நினைவுகள் எனக்குள்ள பத்தரமா இருக்கு.. உன்னோட குரல் மட்டும் எங்கயோ கேட்காம போச்சு.. அதுதான் என்னோட சந்தோசம்னு தெரியும். அப்பப்போ பேசு.. அது போதும்.. லவ் யூ" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Next Story
  • chat