தந்தையர் தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியீடு


தந்தையர் தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியீடு
x

தந்தையர் தினத்தை முன்னிட்டு, ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ ஒன்றில் மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளை ‘மாற்றம் அறக்கட்டளை’ மூலமாக படிக்க வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வௌியாகின. இதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

இதுதவிர மற்றொரு திரைப்படம் ஹண்டர். மாபெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மேலும், இது ராகவா நடிக்கும் 25-வது திரைப்படமாகும்.

நடனத்தில் திறமை வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தனது நடனப்பள்ளியில் வாய்ப்புக் கொடுத்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதோடு இயலாதவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளை சமீபத்தில் சந்தித்தார். அவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும், இணைந்து ராகவா லாரன்ஸூடன் சேவை பணியாற்றுவதாக தெரிவித்திருந்தார். இந்த அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மாற்றுத்திறனாளி பெற்றோர்கள் இருவரும், தங்களின் இரு மகள்களையும் படிக்க வைக்க முடியாமல் உதவி கோரியதாகவும், அவர்களுக்கு தற்போது உதவித்தொகை வழங்கி மாற்றம் அறக்கட்டளை மூலமாக படிக்க வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் இணையத்தில் பகிர்ந்தார்.

1 More update

Next Story