டிவி நடிகரை ரகசிய திருமணம் செய்த வளர்ப்பு மகளுக்கு ராஜ்கிரண் எச்சரிக்கை


டிவி நடிகரை ரகசிய திருமணம் செய்த வளர்ப்பு மகளுக்கு ராஜ்கிரண் எச்சரிக்கை
x

பணம் பறிக்கும் நோக்கில் காதலித்து என் வளர்ப்பு மகளை டி.வி. நடிகர் அபகரித்துக்கொண்டார் என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

சென்னை.

நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்து முகநூல் பக்கத்தில் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் மகளை ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முகம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ''வளர்ப்பு மகள்'' என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்த பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள் என தெரியவந்தது.

இதையெல்லாம் என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை.

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ''சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்'' என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தோம்.

இந்த சூழ்நிலையில்தான், என் மனைவியின் தோழியான ''லட்சுமி பார்வதியை'' பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. என் வளர்ப்புப்பெண், ஒரு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்.

இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு ராஜ்கிரண் கூறியுள்ளார்.


Next Story