இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பிரபலம் பட்டியலில் ரன்வீர் சிங் முதல் இடம்; விராட் கோலிக்கு பின்னடைவு


இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பிரபலம் பட்டியலில் ரன்வீர் சிங் முதல் இடம்; விராட் கோலிக்கு பின்னடைவு
x

2022-ம் ஆண்டில் மிக மதிப்பு வாய்ந்த டாப் 25 இந்திய பிரபலங்களின் மொத்த விளம்பர மதிப்பு ரூ.13 ஆயிரத்து 208 கோடி என கணிக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,


இந்திய அளவில் 2022-ம் ஆண்டிற்கான மிக மதிப்பு வாய்ந்த இந்திய பிரபலங்களின் பட்டியலை கிரால் என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்று அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.

இதன்படி, சமூக ஊடகங்களில் அவர்களது பிரபலம் மற்றும் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் சக்தி வாய்ந்த பிரபலங்கள் என வரிசைப்படுத்தப்படுகின்றனர்.

அதில் டாப் 25 பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. இதன்படி, 2022-ம் ஆண்டில் இந்தியாவின் பிரபலம் வாய்ந்த நபர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பெற்று உள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் அக்சய் குமாரை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு நடிகர் ரன்வீர் சிங் முன்னேறினார். இந்நிலையில், முதல் இடம் பிடித்து உள்ளார். இதன்படி, அவரது விளம்பர சந்தை மதிப்பு ரூ.1,499 கோடியாக உள்ளது.

5 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவரது சந்தை மதிப்பு ரூ.1,535 கோடியில் (2021-ம் ஆண்டு) இருந்து ரூ.1,460 கோடியாக (2022-ம் ஆண்டு) குறைந்து உள்ளது.

2020-ம் ஆண்டில் கோலியின் விளம்பர சந்தை மதிப்பு ரூ.1,962 கோடியாக இருந்தது. இந்த பட்டியலில், நடிகர் அக்சய் குமார் ரூ.1,268 கோடி மதிப்புடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளார்.

நடிகை அலியா பட் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார். அதிக மதிப்பு வாய்ந்த பெண் பிரபலம் என்ற பெருமையையும் பெற்று உள்ளார். அவருக்கு அடுத்து 5-வது இடத்தில் நடிகை தீபிகா படுகோனே உள்ளார்.

டாப் 10 பட்டியலில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஷாருக் கான் ஆகியோரும் உள்ளனர்.

முதன்முறையாக, டாப் 25 பட்டியலில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா என தென்னிந்திய நடிகர்களும் இடம் பெற்று உள்ளனர். ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 23-வது இடம் பிடித்து உள்ளார்.


Next Story