'சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை' - மகளுக்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த்


சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை - மகளுக்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 29 Jan 2024 12:35 PM IST (Updated: 29 Jan 2024 1:07 PM IST)
t-max-icont-min-icon

'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் நடைபெற்றது.

சென்னை,

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் 'லால் சலாம்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் நடித்து இருக்க மாட்டார்' என்று தெரிவித்து இருந்தார்.

அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் 'சங்கி என்பது கெட்ட வார்த்தையா..?' என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சர்ச்சை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அவர், 'சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. அது கெட்ட வார்த்தை என அவர் எங்கும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நினைப்பது அவருடைய பார்வை. இது படத்தின் புரோமோஷனுகாக பேசப்பட்டது இல்லை' என மகளுக்கு ஆதரவாக பேசினார்.

1 More update

Next Story