சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை மகள்கள் வழக்கு - சொத்துக்கள் முழு விவரம்


சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை மகள்கள் வழக்கு - சொத்துக்கள் முழு விவரம்
x

போலி உயில் மூலம் ரூ.270 கோடி சொத்துக்களை நடிகர் பிரபு, ராம்குமார் எங்களை ஏமாத்திட்டாங்க என சிவாஜியின் மகள்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

சென்னை

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும், ராம்குமார், நடிகர் பிரபு என இருமகன்களும் உள்ளனர். இந்தநிலையில், சிவாஜிகணேசன் சுயமாக சம்பாதித்த சொத்துகளில் தங்களுக்கு பங்கு வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சாந்தி. ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் தந்தை சிவாஜி கணேசன் சம்பாதித்த சுமார் ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை தங்களது சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் முறையாக நிர்வகிக்கவில்லை.வீடுகளின் வாடகை பங்கை எங்களுக்கு வழங்காமல் ஏமாற்றிவிட்டனர்.

பெரும்பாலான சொத்துகளை எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனர்.

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சொத்துகளின் விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். இந்து வாரிசுரிமை சட்டப்படி தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் சமபங்கு உண்டு. அதனால், தந்தையின் சொத்துகளில் எங்களுக்கும் உரிமை உண்டு. அதனால், சொத்துகளை பாகப்பிரிவினை செய்து வழங்க வேண்டும். அத்துடன் 1,000 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டனர்.

சாந்தி தியேட்டரில் இருந்த ரூ.82 கோடி மதிப்பிலான பங்குகளை ராம்குமாரும், பிரபுவும் தங்களது பெயர்களுக்கு மாற்றிக்கொண்டனர். எங்களது தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்துள்ளதாக ஒரு உயில் அவர்களிடம் உள்ளது. அந்த உயிலே போலியானது.

பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று எங்களை ஏமாற்றி விட்டனர். எனவே தந்தையின் சொத்துகளில் எங்களுக்குரிய பங்கை மீட்டு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளனர்.

இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் பலமுறை விசாரணைக்கு வந்து, இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சொத்துக்கள் விவரம் 


2001 ஆம் ஆண்டு காலமான நடிகர் சிவாஜி கணேசன், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். சிவாஜி கணேசனின் மனைவி கமலா, 2007ல் காலமானார்.

மறைந்த நடிகர் கணேசனின் மகள்கள் சாந்தி நாராயணசாமி மற்றும் ராஜ்வி கோவிந்தராஜன் ஆகியோர் தங்களின் சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ராம்குமார் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான சொத்து உரிமையை ஏமாற்றியதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்குத் தொடுத்துள்ளனர்.சிவாஜி கணேசனின் சொத்து மதிப்பு ரூ.270.60 கோடி என மகள்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய சொத்துகளின் - பகுதி 1

சாந்தி தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 50 பங்குகள் சிவாஜி கணேசனின் பெயரிலும், 650 பங்குகள் கமலா கணேசனின் பெயரிலும் இருந்ததாக புகார் எழுந்தது. சாந்தி திரையரங்குகள் சென்னை அண்ணாசாலையில் உள்ளது.

அக்டோபர் 2021 இல், புகாரின்படி, சாந்தி திரையரங்குகளில் தங்கள் பெற்றோர் வைத்திருந்த ரூ. 82 கோடி மதிப்புள்ள பங்குகள் மகன்களுக்கு மாற்றப்பட்டதாக மகள்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அக்ஷயா லீஷர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பயன்படுத்தியதாக மகள் தங்கள் புகாரில் கூறியுள்ளார். அந்த நிறுவனம் அவர்களுக்குத் தெரியாமல் சாந்தி திரையரங்குகளின் முகவராக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த சொத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ.82 கோடி
மகள்களின் பங்கின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ 41 கோடி

தஞ்சாவூர் சூரக்கோட்டை கிராமத்தில் 16.73 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம் கமலா பெயரில் பதிவு செய்யப்பட்டது.

மதிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பு: ரூ 2 கோடி

மகள்களின் பங்கின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ 1 கோடி

சர்ச்சைக்குரிய சொத்துகள் - பகுதி 2

சிவாஜி கணேசன் 1954 இல் ராயப்பேட்டையில் ஒரு சொத்து வாங்கினார், பின்னர் அதனை மேம்படுத்தினார்.

1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணேசன் என்பவரால் தியாகராய நகரில் அமைந்துள்ள 'அன்னை இல்லம்' என பெயரிடப்பட்ட ஒரு வில்லா, சிவாஜி கணேசன் அவர் காலத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீடு இது. பிரபுவும், ராம்குமாரும் குடும்பத்துடன் தற்போது இங்கு வசித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மகள்கள் இருவரும் இந்த சொத்துக்களுக்கும் உரிமை கோரியுள்ளனர்.

1961 டிசம்பரில் சென்னை கோபாலபுரத்தில் சிவாஜி கணேசன் தனது மனைவி கமலா பெயரில் ஒரு சொத்து வாங்கினார். பின்னர் அவர் ஒரு பில்டருடன் கூட்டு ஒப்பந்தம் செய்து, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, 'சிவாஜி என்கிளேவ்' எனப்படும் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த வளாகத்தில் சிவாஜி கணேசனும் அவரது மனைவியும் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்று பிரபுவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் 17,122 சதுர அடி பரப்பளவில் உள்ள நான்கு வீடுகள் செப்டம்பர் 1956 இல் சிவாஜி கணேசனால் வாங்கப்பட்டது. இதில் ஒரு வீட்டில் மகள்கள் வசித்து வருகின்றனர். மற்ற மூன்று சொத்துக்களும் குத்தகைதாரர்களிடம் இருந்து வாடகை பெறுறப்படுகிறது. அது இரண்டு மகன்களின் பரமாறிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும், மகள்களுக்குச் சொந்தமான வாடகைப் பங்கை வழங்காமல் புறக்கணித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சொத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ.20 கோடி

மகள்களின் பங்கின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ 10 கோடி

சர்ச்சைக்குரிய சொத்துகளின் பகுதி 3

மணப்பாக்கம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள 43 ஏக்கர் நிலங்களை சிவாஜி கணேசன் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர் பெயரிலும் "கூட்டுக் குடும்ப ஆதரவின்றி சொந்த வருமானத்தில் வாங்கியுள்ளார்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


சொத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ.90 கோடி

மகள்களின் பங்கின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ 45 கோடி
சிவாஜி கணேசனின் சொத்துக்களில் வைரம் பதித்த 1,000 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 500 கிலோ வெள்ளி பாத்திரங்களும் உள்ளடங்குவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் இறந்த பிறகு நகைகள் மற்றும் பாத்திரங்களை இரு மகன்களும் எடுத்துச் சென்றதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
சொத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ.10 கோடி

மகள்களின் பங்கின் மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ 5 கோடி



Next Story