முடிவுக்கு வந்த 'லியோ' சர்ச்சை; சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடக்கம்


முடிவுக்கு வந்த லியோ சர்ச்சை; சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2023 3:29 PM GMT (Updated: 18 Oct 2023 3:39 PM GMT)

சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ந்தேதி(நாளை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கபட்டுள்ளது.

இதனிடையே இந்த படத்தின் ஒரு வார வசூலில் லாப பங்கீடு வழங்குவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்படாத காரணத்தால், சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் 'லியோ' திரைப்படம் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று 'லியோ' படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 'லியோ' படத்தின் ஒரு வார வசூலில் 65 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்க திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் காரணமாக 'லியோ' படத்தை வெளியிடுவதில் நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. நாளை 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Next Story