'ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தத் திரையுலகமே துணை நிற்கும்' - பார்த்திபன் ட்வீட்


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தத் திரையுலகமே துணை நிற்கும் - பார்த்திபன் ட்வீட்
x

ஏ.ஆர்.ரஹ்மான் தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"மறக்குமா நெஞ்சம் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்!

என்னுடைய புதிய படத்துக்கு அவர் இசையமைக்கவில்லையே தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்தபோது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து "நான் பெரிதும் மதிக்கும் மிக சிறந்த படைப்பாளி பார்த்திபன், அவரின் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு.

தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர், தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம்."

இவ்வாறு நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




Next Story