"இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்" - ஞானவேல் ராஜா கருத்துக்கு சுதா கொங்கரா மறுப்பு


இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம் - ஞானவேல் ராஜா கருத்துக்கு சுதா கொங்கரா மறுப்பு
x

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கருத்துக்கு இயக்குனர் சுதா கொங்கரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத் துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 'நான் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் கார்த்தியுடன் இணைந்து 'ராம்' திரைப்படம் பார்க்க சென்றேன். அப்போது சுதா கொங்கரா ராம் படத்தின் மேக்கிங் சரியில்லை என்று என்னிடம் சொன்னார்' என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் அந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சுதா கொங்கரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர். நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன். என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாறு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story