தலைப்பு திருட்டு சர்ச்சையில் விக்னேஷ் சிவன்... பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்..!


தலைப்பு திருட்டு சர்ச்சையில் விக்னேஷ் சிவன்... பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்..!
x

தனது படத்தின் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது புதிய படத்தை இயக்க உள்ளார். 'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அந்த புகைப்படங்களை நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்து படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் தனது படத்தின் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் அந்த அறிக்கையில், 'விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'எல்.ஐ.சி' என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் 'எல்.ஐ.சி' என்கிற பெயரை 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்த பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால், 'எல்.ஐ.சி' என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.

அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்றால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.

'எல்.ஐ.சி' என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இந்த செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் தலைப்பு திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எல்.ஐ.சி' படத்தின் பெயர் பதிவு சான்றிதழ்


Next Story