கமல்-ஸ்ரீவித்யா காதலை பிரித்தது யார்...? பல ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் நேர்காணல் வீடியோ...!


கமல்-ஸ்ரீவித்யா காதலை பிரித்தது யார்...? பல ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் நேர்காணல் வீடியோ...!
x
தினத்தந்தி 2 Jan 2024 10:24 AM GMT (Updated: 2 Jan 2024 12:31 PM GMT)

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்தார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் கடந்த 1978ம் ஆண்டு நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 1988ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் அதே ஆண்டு நடிகை சரிகாவை கமல்ஹாசன் காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள்தான் நடிகை சுருதிஹாசன் மற்றும் நடிகை அக்சரா ஹாசன். 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களும் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகை கௌதமியை காதலித்த நடிகர் கமல் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு பிரிந்தனர். இதனிடையே நடிகர் கமல் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான புதிதில் நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்தார். இவர்களின் காதல் அப்போது பத்திரிக்கைகளில் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இவர்களின் காதல் பிரிந்தது.

இந்நிலையில் காதல் பிரிவு குறித்து நடிகை ஸ்ரீவித்யா நேர்காணல் ஒன்றில் பேசுவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தொகுப்பாளர் 'உங்களுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையேயான காதல் குறித்து சொல்லுங்கள்' என கேட்டார். அதற்கு நடிகை ஸ்ரீவித்யா, 'எங்கள் காதல் குறித்து மொத்த திரையுலகிற்கும் தெரியும். எங்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியும். நாங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஒருநாள் எனது அம்மா என்னையும் கமலையும் அழைத்து அறிவுரை வழங்கினார்.

கமல் நீங்கள் திரையுலகில் சிறந்த கலைஞராகப் போகிறீர்கள். அவளும் ஒரு பெரிய நடிகையாக போகிறாள். அவளுக்கு அந்த திறமை உள்ளது என்று பேசினார். என் அம்மாவின் இந்த வார்த்தைகள் கமலுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அவர் என்னோடு பேசுவதை நிறுத்தினார். அதன் பிறகு அவர் பெரிய நடிகரானார், வேறொரு நடிகையை அவர் திருமணம் செய்து கொண்டதாக நான் கேள்விப்பட்டேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் அவரை இழந்துவிட்டேன்' என்று பதிலளித்தார்.

இதற்கிடையே இருவரின் காதல் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்ரீவித்யாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை காட்டி நடிகர் கமல்ஹாசன், 'இந்த படம் எடுக்கும்போது எனக்கு 19 வயது இருக்கும். நான் திறமையானவர் என்பதை முதலில் எனக்கு உணர்த்தியவர். அன்பு தோழி என்பதை விட காதலி என்று சொல்வதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த படத்தில் அமைந்த பாத்திரங்கள் காரணமாக எங்களுக்குள் காதல் மலர்ந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மறுக்க முடியாமல் இருவருக்கும் அது கடைசி வரை இருந்தது. காதல் கல்யாணத்தில்தான் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை, எனக்கு மிகவும் முக்கியமான ஒரு கதாநாயகி' என்று கூறினார். இந்த இரண்டு வீடியோக்களையும் தற்போது இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ரீவித்யா உயிர் பிரியும் நேரத்தில் நடிகர் கமலை சந்திக்க விரும்பியதாகவும் அதனை அறிந்த கமல்ஹாசன் அங்கு சென்று அவரை கட்டிப்பிடித்து அழுததாகவும் அப்போது பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story