தொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை


தொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 2019-10-03T16:39:06+05:30)

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தொழில் தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வரியா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. அதன்பிறகு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவத் தொடங்கியது.

தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் புகழின் உச்சியில் இருக்கும்போதே, கடந்த 2018-ம் ஆண்டு சக நடிகரான ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டாா். திருமணத்திற்குப் பிறகு தீபிகா படுகோனேவுக்கு சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது. அவரது நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்திற்கு பிறகு எந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. படங்கள் எதுவும் கிடைக்காததை உணர்ந்து கொண்ட தீபிகா படுகோனே, அடுத்த கட்ட நடவடிக்கையாக சுயமாக ஒரு தொழிலை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடு செய்ய இருக்கிறாராம். அதில் பங்குதாரராக கணவர் ரன்வீர்சிங்கை சேர்க்கவில்லை. தன்னுடைய தாய்வீட்டு உறவினர்களின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். இதற்காக தன்னுடைய சக நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம், என்ன தொழில் தொடங்கலாம்? எந்த தொழில் செய்தால் லாபம் பார்க்க முடியும்? என்பது போன்ற ஆலோசனைகளை கேட்டுவருவதாக கூறுகிறார்கள். விரைவில் தீபிகா படுகோனேவை ஒரு தொழிலதிபராக பார்க்கலாம் என்கிறார்கள்.

Next Story