பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல்; ‘‘ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்து கொள்வேன்’’ - நடிகர் விஷ்ணு விஷால்

‘‘பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இந்த நிலையில், விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதுபற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது:-
‘‘வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது...வாழ்வும் இருக்கும்...தாழ்வும் இருக்கும்...‘பாசிட்டிவ்’ ஆகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது...சோதனைகளை தாண்டி போகவேண்டும்...’’ என்று அப்பா சொல்வார். அதுதான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும்.’’
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
‘‘நான் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘காடன்.’ இதில் நான் யானைப்பாகனாக நடித்து இருக்கிறேன். பிரபு சாலமன் இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய ‘கும்கி’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை. மூணாறு, கேரளா, மும்பை, தாய்லாந்து ஆகிய இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தது. சின்ன வயதில் காடு என்றாலே பாம்பு, தேள் நிறைய இருக்கும் என்று பயப்படுவேன். காடுகளில் நடந்த படப்பிடிப்பு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு காடுகளும் ஒவ்வொரு விதமாக இருந்தது. அவை வேறு உலகமாக இருந்தன.’’
மேற்கண்டவாறு விஷ்ணு விஷால் கூறினார்.
Related Tags :
Next Story