ஓ.டி.டி. தளத்துக்கு மாறிவரும் சினிமா; தியேட்டர் அதிபர்கள் கவலை


ஓ.டி.டி. தளத்துக்கு மாறிவரும் சினிமா; தியேட்டர் அதிபர்கள் கவலை
x
தினத்தந்தி 30 July 2021 5:55 AM GMT (Updated: 30 July 2021 5:55 AM GMT)

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடப்பதால் ஓ.டி.டி. தளங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் திரைக்கு வர தயாராக இருந்த முன்னணி நடிகர்களின் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன.

தியேட்டர் தொழில் முடங்கி விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே தமிழில் சூரரை போற்று, பூமி, க.பெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், பென்குயின், லாக்கப். டேனி உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. சமீபத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படமும் ஓ.டி.டி.யில் வெளியானது. நயன்தாராவின் நெற்றிக்கண், ஐஸ்வர்யா ராஜேசின் திட்டம் இரண்டு படங்கள் ஓ.டி.டி.யில் வருகின்றன. அடுத்து விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம், ஜி.வி.பிரகாசின் ஐங்கரன், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட மேலும் பல படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

மலையாளத்திலும் பகத் பாசில் நடித்துள்ள ஜோஜி, சி யூ சுன், மாலிக், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்துள்ள திரிஷ்யம் 2, பிரிதிவிராஜ் நடித்த கோல்ட் கேஸ் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டுள்ளனர். பிரிதிவிராஜ் நடித்துள்ள குருதி என்ற இன்னொரு படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளதாக அறிவித்து உள்ளனர். சினிமா ஓ.டி.டி. தளத்துக்கு மாறி வருவதால் தமிழ், மலையாள தியேட்டர் அதிபர்கள் கவலையில் உள்ளனர். தியேட்டர்கள் திறந்ததும் ஓ.டி.டி. மவுசு குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Next Story