விஜய் ஒரு ‘சூப்பர் ஹீரோ’ - பிரபல மலையாள நடிகர் புகழாரம்


விஜய் ஒரு ‘சூப்பர் ஹீரோ’ - பிரபல மலையாள நடிகர் புகழாரம்
x
தினத்தந்தி 15 Nov 2021 11:27 PM IST (Updated: 15 Nov 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய்யின் நடனத்திற்கு தான் தீவிர ரசிகன் என்று பிரபல மலையாள நடிகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ கே கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய்யின் ரசிகன் நான். இதற்குக் காரணம் அவரது நடனம் தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஆச்சர்யப்படுவேன்.

குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடியிருப்பார். அது எளிதான விசயமல்ல. என்னைப் பொருத்தவரை நடிகர் விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தான் தெரிகிறார். எப்போதுமே அவரது நடனத்திற்கு நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story